ஆறேழு படங்கள் ரிலீசாகும் பண்டிகை நாட்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதால் சமீப காலமாக ரெண்டு அல்லது மூன்று படங்கள் தான் அதிகப்பட்சம். இந்த முறை ஒன்று கூடுதலாக நான்கு படங்கள். இந்த வருட பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாம் ராக், அண்டர்டக்கர், ஸ்டோன் கோல்ட், டிரிபிள் ஹெச் போன்றோர் இல்லாத WWE போல தான் எனக்கு தெரிந்தது. தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை. நான்கு படங்களில் ஓரளவு வித்தியாசமாக இருக்கும் என்று நான் கொஞ்சம் எதிர்பார்த்தது "கதகளி" மட்டுமே.
"பொங்கல் ரிலீஸ் படங்களில் நான் கொஞ்சம் எதிர்பார்ப்பது "கதகளி" படத்தினை தான்.. காரணம் அதோட டைரக்டர் பாண்டிராஜ்.." என என் நண்பனிடம் கூறியபோது "ஆமா.. அவரு பெரிய கிறிஸ்டோபர் நோலன்.. அவரு படத்தை இவன் எதிர்பார்க்குறான்.." என்றான். அவனுடைய டைமிங், ரைமிங் நன்றாக இருந்ததால் நானும் சிரித்துவிட்டேன். ஆனால் அவனுக்கு பதில் கூறவில்லை. அவனைப் போலவே நினைக்கும் நண்பர்களுக்காக என் எதிர்பார்ப்பின் காரணம் பற்றி சில வரிகள். அவர் இயக்கிய பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 (இது நம்ம ஆளு கணக்கில் இல்லை) இந்த ஐந்து படங்களில் என்னளவில் மெரினா மட்டுமே கொஞ்சம் மொக்கை. கிட்டதட்ட டாகுமெண்டரி போல நகரும் படம். மற்ற நான்கு படங்களும் "நல்லா இருக்கு" என பெரும்பாலானோரை சொல்ல வைத்த படங்களே. எதை எடுத்தாலும் கலாய்க்கும் இன்றைய இணைய யுகத்தில் "கலாய்" வாங்காத அளவிற்கு "டீசெண்ட்" ஆன படம் எடுக்கும் "Consistency" கொண்ட வெகு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பதாலே "கதகளி"யை எதிர்பார்த்தேன்.
"கதகளி" என் எதிர்ப்பார்பில் எந்த குறையும் வைக்கவில்லை. படம் ஆரம்பித்த உடன் சம்பந்தமே இல்லாமல் திடீரென முளைத்த "திருவிழா"ப் பாடல் என்னுள் ஒரு பயத்தை உண்டு பண்ணியது. "ஐயையோ.. பாண்டிராஜ் சொதப்பிடுவாறு போலயே.." என்று நினைத்தேன். நான் நினைத்தது சரியென நிரூபிக்கும் படியே விஷால் - காதரின் தெரசா காதல் காட்சிகளும் இருந்தன. பெரிதாய் ரசிக்கும் படி இல்லை. அதே வேளை "சாவடிக்கவும்" இல்லை என்பது பெரும் ஆறுதல். இது போன்ற "டெம்ப்லேட்" சினிமா ஓடிக்கொண்டிருக்கவும் இரவுக் காட்சி என்பதால் தூக்கம் எனக்கு கண்களை சுழற்றியது. ஆனால் நல்லவேளை நாற்பது நிமிடங்கள் நான் தாக்குப் பிடிக்கவும் படம் பரபரப்பாகும் காட்சிகளை தவற விடாமல் பார்த்துவிட்டேன். உடன் வந்த நண்பன் உறக்கத்தால் சில காட்சிகளை தவற விட்டுவிட்டான்.
படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது தான் முழுக்கதையும். "தம்பா" எனும் கடலூரின் கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிச பெரிய மனிதர் இறந்து போக கொலைப் பழி, அவரோடு முன் விரோதம் கொண்ட US ரிட்டன் ஆன, மூன்று நாளில் திருமணம் நடக்கவிருக்கும் விஷால் மீது விழுகிறது. அந்த கொலைப் பழியில் இருந்து அவர் மீண்டு வந்தாரா..? ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் அவரை உண்மையாகவே கொன்றவர் யார் ? என்பதை விவரிக்கும் படம் தான் "கதகளி". காட்சி அமைப்புகள் ஓரளவு நம்பகத்தன்மையோடு நகர்கின்றன. சின்ன சின்ன ஜிகினா வேலைகள், நிறைய காட்சிகளை ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக சண்டை முடிந்தவுடன் "செல்பி" எடுத்து அனுப்பும் காட்சி, US ரிட்டன் விஷால் சீன் போடும் போது அதற்க்கு காதரின் தெரசாவின் எதிர்வினை போன்றவை. நிறைய கதாபாத்திரங்கள். ஆனாலும் எல்லோருக்கும் திரைக்கதையில் வேலை இருக்கிறது. சண்டைக்காட்சிகளும் நன்றாக இருந்தன. நடுநடுவே "பாண்டிய நாடு" மட்டும் அங்கங்கே நினைவில் வந்தது. கிளைமாக்சில் "ட்விஸ்ட்" "ட்விஸ்ட்" "ட்விஸ்ட்" என்று போய்க் கொண்டே இருக்கின்றன.
நிச்சயம் ஒரு முறை பார்த்து ரசிக்கும் படியான படமே இந்த "கதகளி".

Comments
Post a Comment