விஜய் அவார்ட்ஸ்-ல் "தனக்குப் பிடித்த நடிகை நயன்தாரா.. இன்னைக்கு செம்ம அழகா வந்திருக்காங்க... ப்ப்பா.." என விஜய் சேதுபதி கூறிய கொஞ்ச நாள் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் "நானும் ரவுடிதான்" படத்தின் அறிவிப்பு வந்தது. விஜய் சேதுபதி அப்படி பேசியது வெகுஜன மக்களின் கவனம் ஈர்த்த பிறகு வந்த இந்த அறிவிப்பு தனுஷின் வியாபார யுக்தியை காட்டுவதாகவே எனக்கு தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் சகப் போட்டியாளராக பேசப்படும் (அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனும் போதும்) விஜய்சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரிப்பது சிவகார்த்தியனுக்கும் - தனுஷ்க்கும் விரிசல் என்ற செய்தியையும் பரப்பியது. எது எப்படியோ "நானும் ரவுடிதான்" படம் பார்த்தாகிவிட்டது. அது பற்றி இனி பேசுவோம்.
படத்தின் ட்ரைலர் தான் முழுக்கதையும். போலீஸ் ராதிகாவின் மகன் விஜய்சேதுபதி ரவுடி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு பிராடு வேலை செய்கிறார். இன்னொரு போலீசின் மகளான நயன்தாராவை பார்த்ததும் காதலிக்கிறார். தன் பெற்றோரை கொன்ற பார்த்திபனைக் கொன்றால் தான் காதல் செய்வேன் என நயன் கூற காமெடி ரவுடியான விஜய்சேதுபதி பெரும்பலம் கொண்ட பார்த்திபனை கொன்றாரா? இல்லையா? இதுதான் நானும் ரவுடிதான் கதை.
படத்தின் மிகப் பெரிய பலம் கடைசி காட்சி வரை காமெடியாகவே பயணிக்கும் திரைக்கதை. ஒவ்வொருக் காட்சியிலும் நம்மை சிரிக்க வைக்கும் வசனம் வந்துவிடுகிறது. அடுத்த பலம் நடிகர்கள் தேர்வு. விஜய் சேதுபதி, நயன்தாரா காம்பினேஷன் பிரமாதம். விஜய் சேதுபதி வழக்கம்போல் வித்தியாசமான வசன உச்சரிப்பின் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார். நயன்தாராவை விட நம்மை அதிகம் ஈர்ப்பது விஜய் சேதுபதி தான். நயன்தாரா காது கேட்க்காத காதம்பரியாக நன்றாக நடித்திருக்கிறார். நயனின் நடிப்பும் அவரும் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே போகின்றது. அவரின் சொந்த குரலும் சேர்ந்து அவரின் நடிப்பை புதிதாக உணரச் செய்கிறது. ஆர்.ஜே. பாலாஜிக்கு மிக முக்கியமான படமாக இது இருக்கும். அவரின் காமெடி இந்த நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பார்த்திபன் முதன்முறையாக வில்லன். பார்த்திபனின் வில்ல தனத்தை விட காமெடியை மிகவும் ரசித்தேன். அதுவும் கிளைமாக்ஸ் பிரமாதம். ஆனந்தராஜ், "நான் கடவுள் " ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ராகுலாக வரும் அந்த வயதானவர் அனைவரும் தன் பங்களிப்பினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கவர்ந்தது. பாடலும் அதை படமாக்கிய விதமும் சூப்பர்.
சமீபத்தில் "snatch", "Lock, stock and two smoking barrels" என்ற படங்கள் பார்த்தேன். இரண்டும் "Crime comedy" வகையை சேர்ந்த படங்கள். காட்சியில் கொலை நடக்கும் அதைப் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும். இதே போன்றது தான் (சில காட்சிகளில்) நானும் ரவுடிதான் படமும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ராஜேந்திரன், விஜய் சேதுபதியை அழைத்து சென்று கொலையை "லைவ் டெமோ" செய்து காட்டும் காட்சி. ஆனால் இதற்க்கு சிரித்து முடித்தப் பிறகு "இது போன்ற காட்சிகள் வன்முறையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனங்களைப் பழக்கிவிடுமோ" என்ற சமூக சிந்தனை (?) தானாக தோன்றியது. நயன்தாரா பார்த்திபனிடம் "உங்களைப் போடணும் சார்.." என்று சொல்லும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு. என் பக்கத்தில் பத்து வயது மதிக்கத்தக்க மகனோடு வந்திருந்த தந்தை அந்த காட்சியில் தன் சிரிப்பை அடக்கி கொண்டதைப் போல் எனக்கு தோன்றியது. இயக்குனர் நினைத்திருந்தால் அந்த "இரட்டை அர்த்த வசனத்தை" திருத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ரவுடியை நிச்சயம் எல்லோரும் ரசிக்கலாம்.

Comments
Post a Comment