கவிதை பேசுவோம் (8)


நேசித்தவளின் மரணத்தை தாங்க முடியாத ஒருவனின் கதறலாய், தமிழில் ஏற்கனவே இருக்கும் 32078513(எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்) கவிதைகளோடு நான் சேர்த்த 32078514வது சோக  கவிதை...





பனித்துளி பெண்ணே நீ கரைந்ததும் ஏனோ..?


தனிமையின் கையில் எனைக் கொடுத்ததும் ஏனோ...?


கதை பேசும் உந்தன் கண்கள் கனவாகிப் போனதடி..


நினைவுகள் மட்டும் இன்று நிஜமாக தோன்றுதடி...


எங்கே எங்கே உந்தன் வாசம்..


என் இதயம் கேட்குதடி உந்தன் நேசம்..





அதிகாலை பொழுதுகள் அழகாய் தொடங்கி வைப்பாய்..


உறங்கிடும் இரவுகள் அணைப்பினில் முடித்து வைப்பாய்..


கோலப் பொடிதனில் கோடி ஓவியம் தீட்டிடுவாய்..


வானவில் இழுத்து வந்து வாசலில் நிறுத்திடுவாய்..


குறும்பு செய்யும் தருணம் ஒரு குழந்தையென மாறிடுவாய்..


அன்பு தரும் பொழுது அன்னையென தோன்றிடுவாய்..


இறக்கைகள் கொடுத்தாய் இதயத்திற்கு..


அர்த்தங்கள் கொடுத்தாய் என் நிமிடங்களுக்கு...





இருப்பேன் என்று உன்னுடன் என்றாயே..


விடையில்ல கேள்வியை எனை மாற்றிவிட்டு சென்றாயே..


உணர்வுகள் தொலைத்து நிற்கிறேன் இங்கே..


என் உயிர் மலரே நீ போனதும் எங்கே..


சுற்றி இங்கே ஆயிரம் சொந்தம்..


என்றாலும் ஒருவனாய் உணருதே நெஞ்சம்...


வாய் விட்டு நான் கதறும் இந்நொடி 


இறந்தாலும் இன்பமே என் பூங்கொடி...





பின் குறிப்பு : நண்பன் ஒருவனின் குறும்படத்திற்க்காக எழுதப்பட்ட பாடலே இது... 


பின் குறிப்புக்கு ஒரு பின் குறிப்பு : இந்த பாடல் இதுவரை பாடலாகவே இல்லை... 







Comments