கவிதை பேசுவோம் (4)






*     இருளும் ஒளியுமாய் அருளும் இறைவா...

       நீ படைத்திட்ட மனிதனின் படைப்பில்

       சாதி என்றொரு சாத்தான் உண்டு...



*     செத்தப் பிணங்களை செரித்து வாழும் நாங்கள்

       வெறும் சதைப் பிண்டமாய் அவன் கரம் புகுந்தோம்...



*     வேற்றுமை எனும் வேலிகள் பூட்டினோம்...

        மனிதம் மறந்த மரக்கட்டைகளாகினோம்...

        அரசியலெனும் நச்சு மரம் தழைத்தோங்க

        சாதிச் சாக்கடையை அதன் வேர் பாய்ச்சினோம்...



*      உடல் கொடுத்தாய்...

        உயிர் கொடுத்தாய்...

       சிந்தனை செய்யும் திறம் கொடுத்தாய்....

       ஆயினும் ஆக்க வழிகள் அனைத்தும் மறந்து

       சவக்குழிகளை சரி செய்து கொண்டோம்...



*     சாதி அரசியல் நடக்கும் இந்த சமுகத்தில்

       வேடிக்கை பார்பதை மட்டும் வேலையென செய்தோம்....



*     புற்றீசலாய் தினம் புதுப்புதுக் கட்சிகள்...

       புதுப்புதுத் தலைவர்கள்....

       சாதிச் சாயம் பூசிக் கொண்ட அவைகளின் பின்னே

       சவங்களாய் கோஷம் எழுப்பினோம்...



*    "சாதிகள் இல்லையடி பாப்பா"...

       சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே

       இந்த வரிகளை பள்ளியில் வாசித்து முடித்தோம்...



*     என்ன செய்வது...

       அதிகாரம் கொண்ட அரசாங்கமே

       சாதி அகழிகளை ஆதரிக்கும் பொழுது....



*     பிரபஞ்சம் படைத்த இறைவா...

       பிணியாய் எங்களை வதைக்கும்

       பிரிவினைகள் களைவாயா...?

Comments