முன்குறிப்பு : இந்தப் பதிவு "தண்ணீர் தேசம்" பற்றிய எனது விமர்சனம் அல்ல. அப்படி விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியிருப்பதாகவும் நினைக்கவில்லை. என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பதிவு மட்டுமே இது.
நான் கவிதைகள் வாசித்ததுண்டு. நாவல்களும் வாசித்ததுண்டு. ஆனால் கவிதை வடிவில் ஒரு நாவலை வாசித்ததே இல்லை. கவிதை வடிவில் ஒரு நாவலை ருசிகரமாக எழுத முடியுமா என்று இந்த தண்ணீர் தேசத்தை வாசிக்குமுன்பு என்னிடம் கேட்டிருந்தால் இல்லை என்பதே என் உறுதியான பதிலாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நிச்சயமாக முடியுமென்பதே என் வாதம்.
கலைவண்ணன் ஒரு பத்திரிக்கை எழுத்தாளர். அவனது தமிழின் பால் கவரப்பட்டு காதல் புரிகிறாள் தமிழ் என்ற பெரிய தொழிலதிபரின் மகள். கலைவண்ணனும் அவளை காதலிக்கத் தொடங்க தன் ஒரே மகளின் ஆசைக்காக அவர்களின் காதலை அங்கீகரிக்கிறார் அந்த தொழிலதிபராகியத் தந்தை. இவர்களின் காதல் சென்னை கடற்கரையோரங்களின் பகுதிகளில் வளர்ந்து கொண்டே வருகிறது. வழக்கம் போல ஒரு காலைப் பொழுதின் நேரத்தில் அவர்கள் காதல் புரியும் பொழுது அவர்களை ஒரு இயந்திரப் படகு கடக்கிறது. கலைவண்ணனின் மீனவ நண்பர்கள் நான்கு பேர் அந்த இயந்திரப் படகில் இருந்து இவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். "கடலுக்குள் மீனப் பிடிக்கச் செல்கிறோம்.. நீங்களும் வாருங்கள் எழுத்தாளரே... கடலுக்குள் சென்று மாலை மங்குவதர்க்குள் கரைக்கு திரும்பி விடலாம்" என்று கலைவண்ணனுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் அந்த மீனவ நண்பர்கள். இவனுள்ளும் அந்த ஆசை துளிர்விட தன் காதலி தமிழையும் உடன் வரக்கூறி அழைப்பு விடுக்கிறான். சிறுவயதில் சுற்றுலா சென்றிருந்த பொழுது படகில் இருந்து ஆற்றில் விழுந்த தோழி ஒருத்தி இவள் கண் முன்னே இறந்துவிட அன்று முதல் இவளை தண்ணீர் பயம் பீடிக்கிறது. பிறகு அவனுக்காக சம்மதித்து தன் பயம் மறைத்து படகில் பயணிக்கிறாள் தமிழ். அந்தப் படகில் ஆறு ஜீவன்களுடன் ஏழாவதாக ஒரு ஜீவனும் பயணிக்கிறது. அந்த ஏழாவது ஜீவன் ஒரு சுண்டெலி. கரையிலிருந்து பல மைல் தொலைவு பயணித்து முடித்தப் பிறகு அந்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிடுகிறது. வேறு ஏதாவது ஒரு கப்பல் அல்லது படகு வந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முடியும் என் சூழ்நிலை. ஒரு நாள், இரண்டு நாள் என்று நாட்கள் பயணிக்க அவர்கள் கொண்டு வந்த உணவும் குடிநீரும் குறைந்து கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த தண்ணீர் தேசத்திலிருந்து அந்த ஏழு ஜீவன்களும் பிழைத்தார்களா என்பதே இந்த "தண்ணீர் தேசம்"..
வைரமுத்து அவர்களின் எழுத்துக்கள் என்றுமே வசீகரமானவை. நாம் பலமுறை பேசி பழகிருக்கும் வார்த்தைகளை கூட அவர் பயன்படுத்தும் பாங்கு நம் மதி மயங்க செய்யும். இந்த நூலிலும் அவரின் கைவண்ணத்தில் உருவான சில வரிகள் என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. அவரின் தமிழ் ஆளுமை கண்டு பல வரிகளில் வியந்து போனேன்.
நியாயம், அநியாயம் இரண்டும் சூழ்நிலையை பொறுத்தே மாறுபடுகிறது என்பதை அவர் விளக்கி இருக்கும் இடம் நம் வாழ்வியலின் நிஜத்தை அறைந்து கூறுகின்றன. ஒன்றுமே இல்லாத இடத்தில எல்லாம் ஒன்று தான் என்பதையும் சைவம் அசைவம் என்ற மாறுபாடுகள் கொண்டு விளக்கி இருக்கிறார். அதோடு நில்லாமல் நம் அறிவிருக்கு எட்டாத பல அறிவியல் செய்திகளை திரட்டி ஒரே நூலில் எழுதியிருக்கிறார். அந்த வகையில் நிச்சயம் இது ஒரு விஞ்ஞான காவியம் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நாவலை எந்த வடிவில் கூறினாலும் ஒரு வாசகனின் ரசிப்புத் தன்மை உணர்ந்து கூறினால் அந்த நூல் நூறு சதவிகித திருப்தியை அந்த வாசகனுக்கு கொடுக்கும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார் "தண்ணீர் தேசம்" என்ற இந்த தரமான நூலின் மூலம். நிச்சயம் தவறவிடக் கூடாத நூல்..!

Comments
Post a Comment