கவிதை பேசுவோம் (2)







ஒரு காதல் சண்டை



முன்குறிப்பு : சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குங்குற மாதிரி சண்டை போட்டுக்காம காதல் பண்ற காதலர்கள் எங்க இருக்காங்க... கவிதைய ஆயுதமா வச்சிக்கிட்டு ஒரு ஜோடி சண்டை போட்டுக்குறாங்க அப்டின்னு ஒரு சின்ன கற்பனை தான் இது...







காதலி : 



என் வழிகளில் விழுந்து

விழிகளில் நுழைந்தவனே...

இதமாய் பேசி

என் இதயம் கரைத்தவனே...

கவிதைகள் சொல்லி

என்னில் காதல் விதைத்தவனே...

உண்ண மறந்தேனடா உன்னால்..

கனவுகளும் களவு போனதடா  இந்நாள்...

அலைபேசியை அணைத்தப்படியே

இறந்துவிடுகின்றன என் இரவுகள்...

பித்துப் பிடித்தவளாய்

வீட்டின் விட்டம் முறைக்கிறேன்...

அன்னையிடம் அனுதினமும்

வசைகள் பெறுகிறேன்...

காரணம் நீயென

கூறவும் வேண்டுமோ..?

சுற்றி சுற்றி வந்தாயடா

என் காதல் பெறும் முன்பு...

சுற்றித் திரிகிறாய்

உன் நண்பர்களோடு இன்று...

வேலையொன்றும் இல்லாத பொழுதும்

உன் வெட்டி பந்தா தாங்கவில்லை...

அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு

குரங்கு நீ பதிலளிக்கவில்லை...

தகிக்கிறது என் உள்ளம்...

தவறு செய்து விட்டோமோ என்று...

கொழுந்துவிட்டெரியும் என் கோபத் தீயை

அணைத்திட விரைந்து வருவாயா

என் அண்மைத் தொலைத்த காதலனே...



காதலன் : 



வார்த்தைகள் பல அடுக்கி

எனை வசைபாடித் தீர்த்தவளே...

காதலின் ஆரம்பத்தில்

அடிக் கரும்பாய் இனித்தவளே...

நித்தமும் சத்தம் போட்டு

என் நித்திரையைப் பறிப்பவளே...

அழகான உந்தன்

அகம்பாவம் கொல்லுதடி...

சண்டை போட்டு சண்டை போட்டே

என் சக்தியெல்லாம் தீர்ந்ததடி...

மன்னிப்பு கேட்பினும்

மறுத்து விட்டு செல்கிறாய்...

திட்டித் தீர்ப்பதையே

தீவிரமாய் செய்கிறாய்...

உன்னை விரும்புகிறேன் என்று

உரைத்துக் கொண்டேவா

இருக்கமுடியும் ஒவ்வொரு நொடியும்...

புரியவில்லையடி...

உன் புத்தி போடும் புதிர்...

கசக்க வைத்து விடாதே தேவதையே...

என் காதல் வாழ்வை...

தனிமையில் என்னைத் தள்ளும்

உன் வார்த்தைகளை

வழியனுப்பி விட்டு வா...

என்றும் நானிருப்பேன் உன்னவனாக...

Comments